ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலைக்கோட்டுதயம் வேட்புமனு தாக்கல்
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மனுத்தாக்கல் செய்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக சார்பில், மருது கணேஷ் போட்டியிடுகிறார்.
அதிமுக இன்னும் வேட்பாளர் பெயரை இறுதி செய்யவில்லை. அதேநேரம், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கலைக்கோட்டுதயம் இன்று, தேர்தல் அதிகாரியிடம் மனு தாக்கல் செய்தார். அவர், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் வந்து மனுத்தாக்கல் செய்தார். பின்னர், சீமான் நிருபர்களிடம் கூறுகையில், பணப்பட்டுவாடாவை தடுக்காமல் தேர்தல் நடத்துவது பயனற்றது. கடந்த தேர்தலில் ரூ.89 கோடி பணப்பட்டுவாடா நடந்தது என கூறி தேர்தலை ரத்து செய்த தேர்தல் ஆணையம் இதுவரை யார் மீது நடவடிக்கை எடுத்துள்ளது? அசோக்குமார் மரணம் குறித்து அன்புச்செழியன் விசாரிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. அன்புச்செழியனின் செயல்பாட்டிற்கு நாங்கள் ஆதரவளிக்கவில்லை. கடன் வசூலுக்காக அத்து மீறுவதிலும், அவமானப்படுத்தும் போக்குகளில் நடந்துகொள்வதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. இவ்வாறு சீமான் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை