தினகரன் கூடாரம் காலியாக தொடங்கிவிட்டதா !
சென்னை: தினகரன் கோஷ்டியில் இருந்த எம்.பிக்கள் நவநீதகிருஷ்ணன், விஜிலா , புதுவை கோபாலகிருஷ்ணன் ஆகியோர் இன்று முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான அணிக்கு தாவினர். அதிமுகவின் இரட்டை இலை சின்னம் மதுசூதனன் தலைமையிலான அணிக்குதான் என தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அதிமுக கட்சி, கொடி, சின்னம் அத்தனையும் ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிக்கே வந்து சேர்ந்தது.
இதனால் தினகரன் கூடாரம் கலகலக்கத் தொடங்கியது. தினகரன் கோஷ்டியில் இருந்த தொண்டர்கள் அப்படியே ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிக்கு தாவ தொடங்கினர். இப்போது தினகரன் கோஷ்டியில் இருந்த எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களும் ஓபிஎஸ் அணிக்கு தாவ தொடங்கிவிட்டனர். தினகரன் கோஷ்டியில் இருந்த அதிமுக ராஜ்யசபா எம்.பி.யான நவநீதகிருஷ்ணன் இன்று திடீரென முதல்வர் எடப்பாடியை சந்தித்து பேசினார். மேலும் எம்.பிக்கள் விஜிலா சத்தியானந்த், புதுச்சேரி கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் முதல்வர் எடப்பாடியை சந்தித்துப் பேசினார். இதேபோல் அடுத்தடுத்து பலரும் ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணியில் இணையக் கூடும் என கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை