• சற்று முன்

    சென்னையை உலுக்கிய மழை குளமாக காட்சியளித்த சாலைகள்



    சென்னை: சென்னையில் நேற்று அதிகாலை முதல் இரவு வரை பெய்த கனமழை காரணமாக சென்னையின் முக்கிய சாலைகள் குளங்களாக மாறியுள்ளன. சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரில் சிக்கி வாகனங்கள், பழுதாகி நிற்பதால் மக்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் நேற்று காலை முதலே மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு, கிண்டி, தி.நகர், சைதாப்பேட்டை, மீனம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, அண்ணாசாலை, பல்லவாரம், குரோம்பேட்டை, தாம்பரம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. தாழ்வான இடங்களில் உள்ள விடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் தத்தளித்து வருகின்றனர். குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் நேற்றிரவு பலரும் இரவு தூக்கத்தை தொலைத்தனர்.

    குளமான சாலைகள் 


    தொடர் கனமழை காரணமாக சென்னை நகரின் முக்கிய சாலைகள் குளம் போல் காட்சியளிக்கின்றன. ஈ. வெ.ரா. சாலை, வ.உ.சி.சாலையில் ஒரு அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. தேங்கியுள்ள தண்ணீரில் சிக்கிய வாகனங்கள் நடுச்சாலையில் பழுதாகி நிற்பதால் மக்கள் தவித்து வருகின்றனர். தேனாம்பேட்டை பகுதிகளில் வெள்ள நீரில் சாலைகள் மூழ்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். 

    செம டிராபிக் 


    கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து முடங்கியது. நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள் ஸ்தம்பித்தன. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் அவதிக்கு ஆளாகினர். 6 மணிக்கு அலுவலகம் விட்டும் வீடு செல்வதற்கு 8 மணியானதாக தெரிவித்தனர்.
    மிதக்கும் சென்னை 

    கிண்டி, வடபழனி, தி.நகர், மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல பகுதிகளில் கன மழை பெய்துள்ளது. சாலைகளிலும், தெருக்களிலும் ஏராளமான தண்ணீர் தேங்கி நின்றதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
    சிரமத்தில் வாகன ஓட்டிகள் 

    பள்ளிகள் ஒரு மணிநேரத்திற்கு முன்னதாக விடப்பட்டாலும் சாலைகளில் தேங்கியிருந்த வெள்ள நீர் வாகன ஓட்டிகளை கடும் சிரமத்திற்கு ஆளாக்கியது. இரவு வரையிலும் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக அலுவலகத்தில் இருந்து வீடு திரும்புவோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவித்தனர்.

    போக்குவரத்து முடக்கம் 

    கனமழை காரணமாக சென்னை குரோம்பேட்டை பள்ளிகரணை பாலத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பாலத்தின் கீழ் பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையின் பல்வேறு இடங்களில் உள்ள பாலங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.

    மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் 

    மழையால் ஏற்படும் பாதிப்புகளை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் உரிய ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இலங்கை அருகே நிலை கொண்டுள்ளதால், கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad