தாம்பரத்தில் கல்லூரி மாணவி குத்திக் கொல்லப்பட்டார்: தன் கழுத்தையும் அறுத்துக்கொண்ட இளைஞர்
சென்னையை அடுத்துள்ள தாம்பரம் பகுதியில் தனியார் கல்லூரி மாணவி ஒருவர், குத்திக் கொலை செய்யப்பட்டார். அவரைக் குத்தியதாக குற்றம்சாட்டப்படும் இளைஞர் தாமும் தன்னுடைய கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்று தெரியவருகிறது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது என்ன?
சென்னை குரோம்பேட்டை ராதாநகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்வேதா. இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் லேப் டெக்னீசியன் படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில் இன்று ஸ்வேதா படித்துவந்த கல்லூரிக்கு அருகில் அவரும் அவருக்கு அறிமுகமான இளைஞர் ராமச்சந்திரன் என்பவரும் நீண்ட நேரமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், ராமச்சந்திரன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஸ்வேதாவின் கழுத்தில் குத்தினார். இதற்குப் பிறகு அவரும் தன் கழுத்தை அறுத்துக்கொண்டார் என போலீசுக்குக் கிடைத்த ஆரம்பகட்டத் தகவல்கள் கூறுகின்றன.
இன்று மதியம் 2 மணியளவில் ஸ்வேதாவை பார்ப்பதற்காக ராமச்சந்திரன் கல்லூரி அருகில் வந்துள்ளார். இருவரும் தாம்பரம் ரயில் நிலையம் அருகில் பேசிக் கொண்டிருந்தனர். `எதாவது நடக்கலாம்?' என்பதை முன்கூட்டியே யூகித்த ஸ்வேதா, தனது பாதுகாப்புக்காக சக கல்லூரி மாணவி ஒருவரையும் அழைத்து வந்துள்ளார்.
ரயில்
நிலையம் அருகில் ஸ்வேதாவும் ராமச்சந்திரனும் பேசிக் கொண்டிருந்துள்ளனர்.
ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்
தொடர்ச்சியாக, மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தில் ராமச்சந்திரன்
குத்தியுள்ளார். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த சக மாணவி சத்தம் போட்டு
அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை அழைத்துள்ளார்.
இந்தக் சம்பவத்தில் மாணவி ஸ்வேதா சம்பவ இடத்திலேயே
விழுந்துவிட்டார். மாணவியை குத்திய கையோடு அந்த இளைஞரும் கத்தியால் தனது கழுத்தை
அறுத்துள்ளார். பொதுமக்களில் சிலர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து
சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரிகள், ஸ்வேதாவையும் ராமச்சந்திரனையும்
குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு ராமச்சந்திரனுக்கு 9
தையல்கள் போடப்பட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, ஸ்வேதாவின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்படவே,
அவர்கள் குரோம்பேட்டை மருத்துவமனையில் மகளின் சடலத்தைப் பார்த்து கதறிய காட்சிகள்
கலங்க வைத்தன. ராமச்சந்திரன் சென்னை மறைமலை நகர் பகுதியில் தங்கியிருந்தார் என
தெரியவந்துள்ளது. கொலை செய்யும் அளவுக்கு என்ன நடந்தது என்பது குறித்து போலீசார்
தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
யார் இந்த ராமச்சந்திரன்?
மாணவி மரணம் தொடர்பாக சேலையூர் போலீஸ் வட்டாரத்தில் பேசியபோது, ``
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமச்சந்திரனிடம் நடத்திய விசாரணையில்,
இரண்டு பேரும் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டு ஆண்டுகளுக்கு
முன்பு இருவருக்கு இடையில் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது. சென்னையில் பி.எஸ்.சி
மைக்ரோபயாலஜி படித்து முடித்த ஸ்வேதா, லேப் டெக்னீஷியன் வகுப்பில் சேர்ந்தார்.
இந்நிலையில் அண்மைக்காலமாக ராமச்சந்திரனோடு ஸ்வேதா சரிவர பேசாமல் இருந்ததாகக்
கூறப்படுகிறது. இதுகுறித்து அவரிடம் ராமச்சந்திரன் கேட்டபோது உரிய பதில்
கிடைக்கவில்லை. இதனால்,` வேறு யாராவது நபரோடு அவருக்குக் காதல் ஏற்பட்டிருக்குமோ?'
என்ற சந்தேகத்தில் சண்டை போட்டு வந்துள்ளார். இதுகுறித்து பேசுவதற்காக இன்று
தாம்பரம் வந்தவர், இப்படியொரு கொடூரச் செயலில் இறங்கிவிட்டார். அவர் மீது வழக்குப்
பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சை முடிந்த பிறகு சிறையில் அடைக்கப்பட
உள்ளார்" என்கின்றனர்.
கருத்துகள் இல்லை