Header Ads

  • சற்று முன்

    வில்லிவாக்கத்தில் செயின் வழிபறி கொள்ளையர்கள் அட்டகாசம்


    சென்னை வில்லிவாக்கம் திருநகர், 20வது தெருவைச் சேர்ந்தவர் கவிமணி. இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இவரின் மனைவி அகிலா (43). இவர், இன்று காலை 7 மணியளவில் திருநகர் பகுதியில் உள்ள கடைக்கு பால் வாங்க  தனியாக நடந்து சென்றார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து பைக்கில் இருவர் சென்றனர். அதில் பைக்கை ஓட்டியவர் ஹெல்மெட் அணிந்துள்ளார். ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் அகிலா அணிந்திருந்த 3 செயின்களை பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த நபர் பறித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அகிலா, `திருடன் திருடன்' என சத்தம் போட்டார். பைக்கை ஓட்டிய நிலையில், கொள்ளையர்கள் செயின்களைப் பறிக்க முயன்றனர். இதில் நிலைகுலைந்த அகிலா கீழே விழுந்தார். இருப்பினும் 3 செயின்களைக் காப்பாற்ற கொள்ளையர்களுடன் அகிலா கடுமையாகப் போராடி இறுதியில் தோற்றுப்போய்விட்டார். 
    3 செயின்கள் என்பதால் உடனடியாக அறுந்துவிழவில்லை. இதனால், அகிலாவின் கழுத்து மற்றும் கீழே விழுந்ததில் அவருக்கு காயங்கள் ஏற்பட்டன. செயின்களைப் பறித்த பைக் கொள்ளையர்கள் மின்னல் வேகத்தில் சென்று அங்கிருந்து மாயமாகினர். செயின்களைப் பறிக்கொடுத்த அகிலா, நடந்த சம்பவத்தை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் 20 சவரன் நகைகள் வழிப்பறி செய்யப்பட்டதாக புகார் கொடுத்தார். மேலும், அவர் கொள்ளையர்கள் குறித்து சில அடையாளங்களை போலீஸிடம் கூறியுள்ளார். அதன்அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில், அகிலா நடந்து செல்வதை பைக் கொள்ளையர்கள் முதலில் நோட்டமிடுகின்றனர். பிறகு ஆள்நடமாட்டத்தைக் கண்காணித்துவிட்டு தனியாகச் சென்ற அகிலாவின் கழுத்தில் கிடந்த 3 செயின்களைப் பறித்துவிட்டு தப்பிச் சென்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.

    இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்குட்பட்ட பகுதிகளில் தினமும் ஏராளமான செயின்பறிப்பு, செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. இதுதொடர்பான புகார்களுக்கு முதலில் மனு ஏற்பு சான்றிதழ் (சி.எஸ்.ஆர். நகல்)  வழங்கிவருகிறோம். சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 2 லட்சம் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தியுள்ளோம். ஒவ்வொரு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் இருப்பதால் செயின்பறிப்பு செல்போன் பறிப்பு மற்றும் இதர குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர்களை எளிதில் அடையாளம் காண முடியும் சூழல் உள்ளது. வில்லிவாக்கத்தில் நடந்த செயின்பறிப்புச் சம்பவத்தில் விரைவில் கொள்ளையர்களைப் பிடித்துவிடுவோம். சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் பல குற்றசம்பவங்களில் துப்பு துலங்கியுள்ளன.பெரும்பாலும் அதிக நகைகளை அணிந்துகொண்டு தனியாக பெண்கள் செல்வதை தவிர்க்க வேண்டும். கொள்ளையர்களை எதிர்த்து பெண்கள் போராடும் சமயத்தில் அதை மற்றவர்கள் வேடிக்கைப்பார்க்கக் கூடாது. பெண்களுக்கு உதவி செய்து கொள்ளையர்களைப் பிடித்து அருகில் உள்ள காவல் நிலையங்களுக்குத் தகவல் கொடுக்கலாம். இல்லையெனில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் தகவல் தெரிவிக்க வேண்டும். ஏற்கெனவே செயின்பறிப்பு, செல்போன் கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்துவருகிறோம். சென்னையில் நடந்த சில செயின்பறிப்பு சம்பவங்களின் சிசிடிவி காட்சிகள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இந்தக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவோர்களில் பலர், முதல் தடவை குற்றவாளிகளாக இருக்கின்றனர். இதனால்தான் அவர்களைக் கண்டுபிடிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது" என்றனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad