Header Ads

  • சற்று முன்

    குட்கா விவகாரம் : கைது செய்யப்பட்ட நால்வர் யார்?


    தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக குட்கா விற்கப்பட்ட விவகாரத்தில் குட்கா நிறுவன உரிமையாளர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் மத்திய புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாட்டில் குட்காவை உற்பத்தி செய்யவோ விற்பனை செய்யவோ தடை விதிக்கப்பட்ட நிலையில் , விற்பனை செய்ய லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு குறித்து மத்திய புலனாய்வுத் துறை விசாரணை நடத்திவருகிறது. இதன் ஒரு பகுதியாக புதன்கிழமையன்று, மாநில காவல்துறை தலைவர், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோரது இல்லங்கள் உட்பட இந்தியா முழுவதும் சுமார் 35 இடங்களில் மத்திய புலனாய்வுத் துறை சோதனைகளை நடத்தியது.சென்னை நகரின் முன்னாள் காவல்துறை ஆணையர் ஜார்ஜ் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைகள் ( 06.09.18) காலையில்தான் முடிவுக்கு வந்தன.

    இந்நிலையில், எம்டிஎம் குட்காவை உற்பத்தி செய்யும் ஜெயம் இன்டஸ்ட்ரீஸின் உரிமையாளர்கள் ஏ.வி. மாதவராவ், உமா சங்கர் குப்தா ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று கைதுசெய்தனர். மேலும் மாநில உணவுப் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த அதிகாரியான செந்தில் முருகன் என்பவரையும் மத்திய கலால் வரித் துறையின் கண்காணிப்பாளர் என்.கே. பாண்டியன் என்பவரையும் கைதுசெய்தனர்.

    இவர்கள் நால்வரும் விரைவில் காவலில் எடுத்து விசாரிக்கப்படுவார்கள் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    எம்டிஎம் குட்கா நிறுவனத்தின் பிரதான உரிமையாளரான மாதவ ராவ், இதே விவகாரம் தொடர்பாக வருமான வரித் துறை, மத்திய கண்காணிப்புத் துறை, அமலாக்கத் துறை ஆகியவற்றால் விசாரிக்கப்பட்டிருக்கிறார்.

    இதற்கிடையில், இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டு சோதனைக்கு உள்ளாகியிருக்கும் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கரை பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்றும் மாநில காவல்துறை தலைவர் டிகே. ராஜேந்திரனை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்றும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad