பாலி எரிமலை சீற்றம்: ஆபத்து எச்சரிக்கை மீறி மக்கள் வெளியேற மறுப்பு
பாலி விமான நிலையத்தை 24 மணி நேரத்திற்கு மூடுவதாக போக்குவரத்து அமைச்சகம் திங்கட்கிழமை காலை அறிவித்தது. இதனால், 400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 59,000 பயணிகள் சிக்கியுள்ளனர்.
இந்நிலையில், புதன்கிழமை வரை விமான நிலையம் மூடப்படும் என செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
அருகில் உள்ள லோம்பக் தீவில் உள்ள விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது. பாலியில் உள்ள சுற்றுலாப் பயணிகளை படகு முனையத்திற்கு அழைத்துச் செல்ல பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குட்டா மற்றும் செமின்யாக் ஆகிய முக்கிய சுற்றுலா தளங்கள் எரிமலையிலிருந்து 70 கி.மீட்டர் தொலைவில் உள்ளன.சாம்பல்களுக்கு மத்தியில், தண்ணீரோடு கலந்துள்ள குளிர்ந்த தீக் குழம்புகளை எரிமலைக்கு அருகில் உள்ள வயல்கள் மற்றும் ஆறுகளில் காண முடிகிறது. மக்கள் அதன் அருகில் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மலையைச் சுற்றியுள்ள 10 கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள மக்கள் வெளியேற வேண்டும் என்று அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்தோனீசியாவின் பாலி தீவில் உள்ள அகுங் மலை, எரிமலை சாம்பல்களை வெளியேற்றி வருவதால், பாலி சர்வதேச விமானநிலையத்தை அதிகாரிகள் இரண்டாம் நாளாக மூடியுள்ளனர்.
மலை உச்சியின் மேலிருந்து 3 கிலோ மீட்டர் உயரத்திற்கு கரும்புகை சூழ்ந்துள்ளது.
மிகப்பெரிய வெடிப்பு ஏற்படலாம் என அச்சம் எழுந்துள்ளது. இதனால் திங்கட்கிழமையன்று அதிகாரிகள் உச்சபட்ச எச்சரிக்கையை விடுத்தனர்.
மலையில் அருகில் வசிக்கும் ஒரு லட்சம் மக்கள் வெளியேறவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
பாலி எரிமலை: எச்சரிக்கையை மீறி வெளியேறாத மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்படலாம்
சீறும் எரிமலை- அச்சத்தில் அழகிய பாலி தீவு (புகைப்படத் தொகுப்பு)
எரிமலை சாம்பல்கள், விமானத்தின் இஞ்சின்களை சேதப்படுத்தலாம். அத்துடன் எரிபொருள் மற்றும் குளிர்ச்சி அமைப்புகளில் தடையை ஏற்படுத்தலாம். சாம்பல்களால் விமானியின் பார்வைக்கும் இடையூறுகள் ஏற்படலாம். எவ்வளவு மக்களை வெளியேற்ற வேண்டும் என கணக்கிடுவதில் அதிகாரிகள் சிரமங்களை எதிர்கொண்டுவருவதாகத் தேசிய பேரிடர் மேலாண்மை கூறியுள்ளது. ஆனால், 90,000 முதல் 1,00,000 வரையிலான மக்கள் வெளியேற வேண்டும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.
தற்போது வரை 29,000 பேர் மட்டுமே முகாம்களுக்குச் சென்றுள்ளனர். மற்றவர்கள் லோம்பக் போன்ற இடங்களுக்குச் சென்றுள்ளனர்.
ஆனாலும், இன்னும் பலர் குடியிருப்பில் இருந்து வெளியேற மறுத்துவிட்டனர். சிலர் தங்களது இடங்களிலே பாதுகாப்பாக உணர்கின்றனர். மற்றவர்கள் தங்களது நிலத்தையும், கால்நடைகளையும் விட்டு செல்ல விரும்பவில்லை என பேரிடர் மேலாண்மை அணையத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை