காஞ்சிபுரத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. கொட்டும் மழையிலும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் 72 குண்டுகள் முழங்க மறைந்த காவலர்களுக்கு வீர வணக்கம் செலுத்தினர்
பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21ந்தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதன் பின் துணை காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர்கள் பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பிறகு 24 போலீசார் தலா மூன்று முறை 24 குண்டுகள் என 72 குண்டுகள் முழங்க பணியின் போது மறைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
1959-ஆம் ஆண்டு லடாக் எல்லைப் பகுதியில் தாய்நாட்டைக் காப்பதற்காக வீரமரணமடைந்த 10 மத்திய ரிசர்வ் காவல் படைக் காவலர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தியாகத்தைப் போற்றும் காவலர் வீரவணக்க நாளில், நாட்டில் அமைதியையும், சட்டம்-ஒழுங்கையும் நிலைநாட்டும் உயரிய கடமையில் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்த காவல் துறையினர் அனைவருக்கும் வீர வணக்கங்கள்! இயற்கைப் பேரிடர்கள், விபத்துகள், குற்றச் சம்பவங்கள், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழல்கள் எனப் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, துணிவுடனும், விழிப்புடனும் பணியாற்றும் காவலர்களின் அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது. கடமையின் பாதையில் இன்னுயிர் நீத்து, அமரர்களான வீரத் தியாகிகளுக்குத் தலைவணங்கி அஞ்சலி செலுத்துவதோடு, காலநேரம் கருதாமல், அயராது உழைத்து, நாட்டின் அரணாகத் திகழும் காவல் துறையினரின் உன்னதப் பணிகளைப் போற்றிடுவோம்!