விஜயதசமி திருநாளில் மழலைக் குழந்தைகளின் பிஞ்சு விரல்களைப் பிடித்து அரிசியில் முதல் தமிழ் எழுத்தான ‘அ’ எழுதி கல்விப் பயணத்தைத் தொடங்கி வைத்த பள்ளித் தாளாளர்!!!
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓரிக்கை பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளியான பாரதிதாசன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில், விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
விஜயதசமி நாளில் தொடங்கும் புதிய முயற்சிகள் வெற்றியடையும் என்பதும், இந்நாளில் கல்வியைத் தொடங்கும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பதும் பாரம்பரிய நம்பிக்கையாக உள்ளது. இதன் காரணமாக, தங்களது குழந்தைகளின் கல்விப் பயணத்தை விஜயதசமி நாளில் தொடங்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில், பாரதிதாசன் பள்ளியில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில், இரண்டரை வயது முதல் மூன்றரை வயது வரையிலான மழலைக் குழந்தைகளைப் பெற்றோர்கள் புத்தாடை அணிவித்து பள்ளிக்கு அழைத்து வந்தனர். பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள சரஸ்வதி தேவி சிலை முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளித் தாளாளர் அருண்குமார் தனது மடியில் குழந்தைகளை அமரவைத்து, அவர்களின் பிஞ்சு விரல்களைப் பிடித்து அரிசியில் முதல் தமிழ் எழுத்தான ‘அ’ என எழுதி கல்வியின் முதல் அடியை எடுத்து வைக்கச் செய்தார். மழலைகளின் விரல்கள் அரிசியில் எழுத்துகளைப் பதிக்க, பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் அந்த அழகிய தருணத்தைக் கண்டு ரசித்தனர். தொடர்ந்து குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி, பள்ளியில் மாணவர் சேர்க்கையும் தொடங்கி வைக்கப்பட்டது. கல்வியின் வாசலை முதன்முதலாகத் திறந்துவைத்த இந்த வித்யாரம்பம் நிகழ்ச்சி, பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் நிறைந்த அனுபவமாக அமைந்தது.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் செயலாளர் ரமேஷ், முதல்வர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.