ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில், தமிழகம் முழுவதும் 1,353 ஆம்புலன்ஸ்கள்இயக்கப்பட்டு வருவதாகவும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 19-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களில் 95-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் இரவு, பகல் பாராமல்
பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.கடந்த 4 மாதங்களாக பெரும்பாலான தொழிலாளர்களுக்கு சட்டவிரோதமாக ஊதியக் குறைப்பு செய்து சம்பளம் வழங்கப்படுவதாக சங்க நிர்வாகிகள் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக திட்ட இயக்குநரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர். இதையடுத்து, ஊதியக் குறைப்பை எதிர்த்து வேலூர் மாவட்ட தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் ஊதியம் வழங்கல் சட்டத்தின் கீழ் புகார் அளிப்பது, சம்பளக் குறைப்பு இன்றி முழுமையான ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், சட்டப்படி 8 மணி நேர வேலை நேரத்தை அமல்படுத்த வேண்டும், சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும், பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான பணியிடங்கள் மற்றும் கழிவறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும், ஆண்டுதோறும் 25 சதவீத ஊதிய உயர்வு மற்றும் 8.33 சதவீத தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்பன
உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால்,
அடுத்தகட்டமாக தொடர் போராட்டங்களை நடத்துவது என்றும், விரைவில் களப்போராட்டத்தை அறிவிக்க
மாநிலக் குழுவுக்கு அதிகாரம் வழங்கியும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது
ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.