திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திமுக தலைவர் கலைஞர் மறைவை அடுத்து, அண்ணா அறிவாலயத்தில் கடந்த 14ஆம் தேதி, திமுக அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், வரும் செவ்வாய்க்கிழமை திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், திமுக தலைவர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியிட உள்ள நிலையில், காலையில் இருவரும், சென்னை அண்ணா நகரில் உள்ள பேராசிரியர் க.அன்பழகன் வீட்டுக்குச் சென்று அவரிடம் ஆசிபெற்றனர்.அதன்பின்னர், மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர், அங்கு தங்களது வேட்புமனுவை வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அங்கிருந்து நேரடியாக, கோபாலபுரம் இல்லத்துக்கு வந்த மு.க.ஸ்டாலினும், துரைமுருகனும் வேட்புமனுவை கலைஞர் படத்தின் அருகே வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் தயாளு அம்மாளிடம் மு.க.ஸ்டாலின் ஆசி பெற்றார். இதன் பின்னர் அண்ணா அறிவாலயம் வந்த மு.க.ஸ்டாலினுக்கு, மாநிலங்களவை எம்.பி. கனிமொழி வாழ்த்து தெரிவித்தார். மேலும், அண்ணா அறிவாலயத்தில் கூடியிருந்த தொண்டர்களும் நிர்வாகிகளும் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.
இதையடுத்து, மு.க.ஸ்டாலினும், துரைமுருகனும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். திமுகவைச் சேர்ந்த 65 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிந்தனர். வேட்புமனுவைத் தாக்கல் செய்துவிட்டு புறப்பட்ட மு.க.ஸ்டாலினை திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் வாழ்த்தினர்.
மாலை 4 மணியுடன் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான நேரம் முடிவடைந்ததை அடுத்து, மு.க.ஸ்டாலினைத் தவிர வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். எனவே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு 28ஆம் தேதி முறையாக வெளியாகும் என்றும் ஆர்.எஸ்.பாரதி கூறினார். அதேபோல், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை