Header Ads

 • சற்று முன்

  அசத்தும் குக்கர் மிரளும் எதிர்கட்சிகள் !  தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்கப்பட்டதிலிருந்தே ஆர்.கே.நகர் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. "துரோகிகளுக்கும் எதிரிகளுக்கும் ப்ரஷர் கொடுக்கவே இந்தச் சின்னத்தைத் தேர்ந்தெடுத்தேன்" என்று அவர் அதிரடி கிளப்ப, "பிரஷரில் வெடிக்கப்போவது யார் என்பது இன்னும் 2 வாரங்களில் தெரியும்" என மாஃபா பாண்டியராஜன் பதிலடி கொடுத்தார். தற்போது தி.மு.க, அ.தி.மு.க, பி.ஜே.பி என மற்ற கட்சிகள் அனைத்தும் மக்களுக்கு அறிமுகமான தத்தமது சின்னத்தில் போட்டியிட, தினகரன் மட்டும் சுயேச்சை சின்னத்தில் களமிறங்கி உள்ளார். எனவே, அவரது சின்னத்தைப் பிரபலப்படுத்த சில ஐடியாக்கள்...
  சோத்துப்பானை போல மெதுவாக இல்லாமல், குக்கரைப் போல குயிக்காக மக்களின் குறைகளைத் தீர்க்க ஆதரிப்பீர் குக்கர் சின்னம்னு சொல்லி வாக்கு கேட்கலாம்!
  தாய்மார்களின் பேராதரவு பெற்ற சின்னம் குக்கர்! அது பண்ணவே பண்ணாது மக்கர்! இதை எதிர்த்து நிக்கிறவங்க ஜோக்கர்! எங்க சின்னம்தான் டக்கரோ டக்கர்னு அடுக்குமொழியில் பேசி அதகளம் பண்ணலாம்!
  வெறும் இலைய விரிச்சு உட்கார்ந்தால் போதாது, குக்கர்ல சமைச்சால்தான் சாப்பாடுன்னு சொல்லி எதிர்த்தரப்பைக் கடுப்பேத்தலாம்!
  குக்கிமேன் மாதிரி குக்கரைக் கையில் பிடித்திருக்கும் குக்கர்மேன் உருவத்தை உருவாக்கி, அதைக் காற்றடைத்த உருவமாக்கி, தொகுதி முழுக்க நிறுத்தலாம்! காற்றடித்த பலூனில் வரைந்து பறக்கவும் விடலாம்!
  குக்கரை வைத்து சமையல் மட்டுமல்ல, குக்கர் மூடியை தொப்பி போல மழை நேரத்தில் பயன்படுத்தலாம், குக்கரைத் தலையில் கவிழ்த்தி ஹெல்மெட் போல மாட்டி பைக்ல போகலாம், குக்கர் கேஸ்கட்டை வைத்து டென்னிகாய்ட் விளையாடலாம், குக்கர் குண்டை டேபிள் வெயிட்டாகப் பயன்படுத்தலாம்னு டேபிள்மேட் மாதிரி குக்கரோட 18 வகை பயன்பாடுகளைச் சொல்லி வாக்குச் சேகரிக்கலாம்!
  அவர்களது தொலைக்காட்சியில் குக்கரில் சமைக்கும் சத்தான சமையல்னு தேர்தல் முடியிற வரைக்கும் சமையல் நிகழ்ச்சியாகத் தொடர்ந்து காட்டி அசத்தலாம்! இப்படி, வெஜ், நான்வெஜ்னு மாற்றி மாற்றி 24 மணி நேரமும் சமையல் நிகழ்ச்சியாக நடத்தினால் பெண்கள் மனதில் நச்சுன்னு குக்கர் சின்னம் பதிஞ்சுடும்! 
  குக்கர் மூடியை டாப் ஆங்கிள்ல பார்த்தால், நடுவுல இருக்கும் குண்டு, கைப்பிடியோட, சிவலிங்கம் மாதிரியே தெரியும்! சிவனோட அருள் பெற்ற சின்னம்தான் இந்த குக்கர் சின்னம்னு ஆன்மிக சென்டிமென்ட் செய்தியை வாட்ஸ்-அப்ல கிளப்பிவிட்டு, இந்தச் செய்தியை அடுத்த நிமிஷமே 50 பேருக்கு ஃபார்வர்ட் பண்ணினால் நல்லது நடக்கும்ங்கிற தகவலையும் சேர்த்து வாட்ஸ்-அப்ல பரவ விடுங்க! அப்படி பரவுவதால் அவங்களுக்கு நல்லது நடக்குதோ இல்லையோ, உங்களுக்கு ஓட்டு குவிஞ்சுடும்!
  பிரெஸ்டிஜ் குக்கர் விளம்பரம் மக்களிடம் ரொம்ப பாப்புலர். அதையே மாற்றி, மனைவியை நேசிக்கிறவங்க, குக்கரை வேணாம்னு சொல்வாங்களா?ன்னு சொல்லி, மனைவியை நேசிக்கிறவங்க குக்கருக்கு ஓட்டுப் போடுங்கன்னு பிரசாரம் பண்ணலாம்!
  மற்ற கட்சியினரின் வீட்டில் குக்கரில் சமையல் செய்வதை ரகசியமாகக் கண்காணித்துப் படமெடுத்து, எதிர்க்கட்சிக்காரர்களின் வீட்டிலும் மனதிலும் இடம்பிடித்த ஒரே சின்னம் குக்கர் என்று பரபரப்பு விளம்பரத்தைக் கிளப்பி விடலாம்! இதற்குப் பயந்து கமுக்கமாக குக்கரில் பால் காய்ச்சினாலும் விசிலடித்துக் காட்டிக் கொடுத்து விடும்!

  கருத்துகள் இல்லை

  Post Top Ad

  Post Bottom Ad