காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், சர்வதேச குழந்தை திருமண ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், சமூக நல மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் கேண்டீன் ஹேண்ட் தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து இப்பேரணியை நடத்தியது.
இப்பேரணியை வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் . S.P.K. தென்னரசு அவர்களும், வனத்துறை அமைச்சர் . R.V. ரஞ்சித் குமார் அவர்களும் கொடியசைத்து துவக்கி வைத்தனர். ஒவ்வொரு வருடமும் நவம்பர் 24-ஆம் தேதி சர்வதேச குழந்தை திருமண ஒழிப்பு தினமாக தமிழக அரசு கடைபிடித்து வருகிறது. இப்பேரணியில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்த தனியார் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு, குழந்தை திருமணத்திற்கு எதிராக விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்வில், குழந்தை திருமணத்தை ஒழிப்போம் என்ற உறுதிமொழி பதாகையில் அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சினேகா, மாவட்ட வருவாய் அலுவலர் திவ்யஸ்ரீ, சார் ஆட்சியர் திரு. புவனேஷ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


