வாக்குரிமையைப் பாதுகாக்க தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்!bஅகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநாட்டில் மேனாள் நீதியரசர் கே.சந்துரு வலியுறுத்தல்!
அரசியல் சட்ட உரிமைகளை மக்களிடம் கொண்டு செல்ல வழக்கறிஞர்கள் முன்வர வேண்டும்! - கே.சந்துரு
அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநில 13வது மாநாட்டையொட்டி நடைபெற்ற கருத்தரங்கில், “ வாக்குரிமையும் தேர்தல் ஆணையமும்” என்ற தலைப்பில், மேனாள் நீதியரசர் கே.சந்துரு அவர் பேசியதாவது;
வாக்குரிமையைப் பாதுகாப்பது, தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தையும் நடுநிலையையும் உறுதிப்படுத்துவது, அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகளை மக்களிடம் கொண்டு செல்வது ஆகியவை முக்கியக் கடமைகள் என்று வலியுறுத்தினார்.
“சட்டம் இருட்டறை போன்றது; வழக்கறிஞரின் வாதம் அந்த அறையில் ஒளியேற்றும் விளக்கு போன்றது” என்ற பேரறிஞர் அண்ணாவின் கருத்தை நினைவுகூர்ந்த அவர், அரசியல் சட்டம் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளுக்கான ஆவணம் மட்டுமல்ல; அனைத்து மக்களுக்குமான உரிமைப் பாதுகாப்பு ஆவணம் என்றார். அதன் நோக்கங்களையும் உரிமைகளையும் பொதுமக்களிடம் விளக்குவதில் வழக்கறிஞர்கள் முன்னிலை வகிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
1962 சட்டமன்றத் தேர்தலில் அண்ணா காஞ்சிபுரத்தில் தோல்வியடைந்ததைச் சுட்டிக்காட்டிய சந்துரு, வாக்குரிமை அனைவருக்கும் இருந்தாலும் பணபலம், பொருளாதாரச் செல்வாக்கு, அதிகாரம் ஆகியவை தேர்தல் முடிவுகளைப் பாதிக்கக்கூடும் என்றார். 1975 நெருக்கடி நிலைக் காலத்தில் நெசவாளர் சங்கத் தலைவர் கே.எஸ்.பார்த்தசாரதி கைது செய்யப்பட்ட சம்பவத்தையும், சாம்சங் தொழிலாளர்கள் சங்கம் அமைக்கும் உரிமைக்காக 49 நாட்கள் போராடியதையும் குறிப்பிட்டார். மேலும் அரசியல் சட்டத்தின் 19(1)(சி) பிரிவு சங்கம் அமைக்கும் உரிமையை உறுதிப்படுத்துகிறது என்றார்.
இந்தியாவில் பொதுவாக்குரிமை சுதந்திரத்திற்குப் பிறகு அரசியல் சட்டத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டது. 325-வது பிரிவு மதம், இனம், சாதி, பாலின அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் இருந்து விலக்குவதைத் தடுக்கிறது; 326-வது பிரிவு வயதுவந்தோருக்கான பொதுவாக்குரிமையை உறுதிப்படுத்துகிறது என்று விளக்கினார். உத்தரமேரூர் குடவோலை முறையை இன்றைய சமத்துவ வாக்குரிமையுடன் ஒப்பிடும்போது அக்காலத்தில் யாருக்கு உரிமைகள் வழங்கப்பட்டன, யாருக்கு மறுக்கப்பட்டன என்பதையும் ஆராய வேண்டும் என்றார்.
அரசியல் சட்டத்தின் 324-வது பிரிவின்படி தேர்தல் ஆணையம் சுதந்திரமாகவும் நடுநிலையாகவும் செயல்பட வேண்டும். ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைவரிடமும் சமமான அணுகுமுறை இருக்க வேண்டும். தேர்தல் ஆணையர்களின் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம் என்றும், தலைமை நீதிபதிக்கு பதிலாக மத்திய சட்ட அமைச்சர் இடம்பெறும் மாற்றம் ஆணையத்தின் சுதந்திரம் குறித்த கேள்விகளை எழுப்புவதாகவும் விமர்சித்தார். வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தில் தகுதியானவர்களின் பெயர்கள் நீக்கப்படக் கூடாது. பெயர் சேர்த்தல், மீள்சேர்த்தல், மேல்முறையீடு ஆகியவற்றுக்கு எளிய நடைமுறைகள் மற்றும் விரைவான தீர்வு தேவை என்றார். வாக்குரிமை நிர்வாக நடைமுறை அல்ல; குடிமக்களின் அரசியல் பங்கேற்புக்கான அடிப்படை உரிமை என்றும் குறிப்பிட்டார். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக 400 இடங்கள் பெறும் என்ற முழக்கத்துக்கு மாறாக 240 இடங்கள் பெற்றதைச் சுட்டிக்காட்டிய அவர், மக்களின் தீர்ப்பை மதிப்பதே ஜனநாயகத்தின் அடிப்படை என்றார். அமைதியான போராட்டம், கருத்துச் சுதந்திரம், எதிர்ப்பை வெளிப்படுத்தும் உரிமை ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும்; கைது நடவடிக்கைகளிலும் சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றார்.
“இந்திய மக்களாகிய நாம்” என்ற அரசியல் சட்ட முகப்புரையின் தொடக்கம் ஜனநாயகத்தின் அடிப்படை உணர்வை வெளிப்படுத்துகிறது. அரசியல் சட்டம் பள்ளி மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். வழக்கறிஞர்கள் நீதிமன்றப் பணியைத் தாண்டி உரிமை விழிப்புணர்வு, சட்ட வழிகாட்டுதல், அரசியல் சட்டப் பாதுகாப்பு ஆகிய சமூகப் பொறுப்புகளை ஏற்க வேண்டும் என இவ்வாறு அவர் கருத்துரைத்தார்.
இந்த கருத்தரங்கத்திற்கு மாநிலத் துணைத் தலைவர் ஜி.சம்கிராஜ் தலைமையில் நடைபெற்றது. வரவேற்புக்குழு பொருளாளர் எஸ்.ருத்ரநாத் வரவேற்றார். செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் எஸ்.சரவணன் நன்றி கூறினார்.