அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் தமிழ்நாடு 13வது மாநில மாநாடு காஞ்சிபுரத்தில் வழக்கறிஞர்கள் ஆர்.மலைச்சாமி எம்.எஸ்.நாதன் நினைவரங்கில் (அக்.17) சனிக்கிழமையன்று நடைபெற்றது.
மாநாட்டை துவக்கி வைத்து திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ் பேசுகையில், மக்களின் வாக்குரிமையை பறிக்கும் வகையில்தான் எஸ்.ஐ.ஆர். போன்ற முறைகள் செயல்படுத்தப்படுவதாக பிரகாஷ்ராஜ் குற்றம் சாட்டினார். உயிரோடு இருப்பவர்களை செத்துவிட்டதாக கூறியும், ஒரே வீட்டில் பல ஆண்டுகளாக வசிப்பவர்களை வேறு இடத்திற்கு மாறிவிட்டதாக குறிப்பிட்டும், சுமார் 13 கோடி வாக்காளர்களின் பெயர்களைத் தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டால் முறையான பதில் இல்லை. எந்தவொரு குடியரசுத் தலைவருக்கோ அல்லது பிரதமருக்கோ இல்லாத 'ஜூடிசியல் இம்யூனிட்டி' எனப்படும் சிறப்புப் பாதுகாப்பை, ஒரு சுதந்திரமான அமைப்பான தேர்தல் ஆணையத்திற்கு மத்திய அரசு எதற்காக வழங்கியது என்று கேள்வி எழுப்பினார். குற்றங்கள் நடக்கும் முன்பே அதிலிருந்து தப்பிக்கத் திட்டமிட்டுத்தான் இந்தச் சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
பீகார் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின்போது வெளிப்படையான முறைகேடுகள் நடந்தபோது, உச்சநீதிமன்றம் உரிய நேரத்தில் தலையிட்டு தடுத்திருக்க வேண்டும் என்று பிரகாஷ்ராஜ் பதிவு செய்தார். தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயல்படாமல், ஆளுங்கட்சியின் நலனுக்கேற்ப செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்த போராட்டம் நீண்ட காலப் போராட்டம். எங்கே இளைஞர்கள் நின்றாலும், குடிமக்கள் தெருவுக்கு வந்து நின்றாலும், அவர்களுடன் நிற்க வேண்டியது நம் எல்லாருடைய கடமை. நாட்டின் எதிர்காலத்தை காப்பாற்றவும், பறிபோகும் உரிமைகளை மீட்கவும் இளைஞர்களும், பொதுமக்களும் வீதிகளில் வந்து போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றார். எஸ்ஐஆர் குளறுபடிகளை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடக்கும் போது தமிழ்நாட்டில் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது. இது மக்களோட பிரச்சனை, ஒரு கட்சியோட பிரச்சனை கிடையாது. இது ஜனநாயகத்துக்கு வந்திருக்கிற ஆபத்திற்கான பிரச்சனை. பாபா சாகேப் அம்பேத்கர் வழங்கிய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் காந்திய வழியிலான அகிம்சைப் போராட்டம், பகத்சிங்கின் வீரம் ஆகியவற்றைக் நெஞ்சில் ஏந்தி மக்கள் போராட அனைவரும் முன்வர வேண்டும் என அவர் அறைகூவி அழைப்பு விடுத்தார். மேலும் இதை திசை திருப்புவதற்கு முயற்சி செய்வார்கள். அதற்கெதிராக நாம் ஒரு குரலாக நிற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த மாநாட்டிற்கு சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கே.இளங்கோ தலைமையில் நடைபெற்றது. வரவேற்புக்குழுத் தலைவர் எ.கருணாநிதி வரவேற்க, சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ஜி.ஆர்.பிரசாத் தலைமை உரை ஆற்றினார். மாநிலச் செயலாளர் கே.பாண்டீஸ்வரி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.சிவக்குமார் செயல் அறிக்கையை சமர்ப்பித்தார். மாநில பொருளாளர் எஸ்.மாசேதுங் வரவு-செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். சங்கத்தின் தேசிய தலைவர் பிகாஷ்ரஞ்சன் பட்டாச்சார்யா சிறப்புரையாற்றினார்.
இதற்கு முன்னதாக வழக்கறிஞர்கள் பேரணியை மாநிலத் துணைத் தலைவர் கே.இளங்கோ துவக்கி வைத்தார். இப்பேரணி ஊர்வலமாக சென்று மாநாடு அரங்கத்தை சென்றடைந்தது. மாநில செயல் தலைவர் ஏ.கோதண்டம் சங்க கொடி ஏற்றி வைத்தார். மாநில துணைத்தலைவர் ஆர்.ராமமூர்த்தி கண்காட்சி அரங்கத்தை திறந்து வைத்தார்.
இந்த மாநாடு இன்று தொடர்ந்து நடைபெறும்