ஆம்பூர் அடுத்த சோமலாபுரத்தில் குப்பை மேடாக மாறிய இளைஞர் விளையாட்டு மைதானம் –
ஆம்பூர் அடுத்த சோமலாபுரத்தில் குப்பை மேடாக மாறிய இளைஞர் விளையாட்டு மைதானம் – கழிவுநீர் கால்வாய்களை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சோமலாபுரம் ஊராட்சியின் 6-வது வார்டு புதுமனை பகுதியில் அமைந்துள்ள இளைஞர் விளையாட்டு மைதானம், முறையாக பராமரிக்கப்படாமல் குப்பைகள் கொட்டும் இடமாக மாறியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
விளையாட்டு மைதானத்தில் நீண்ட நாட்களாக குவிந்துள்ள குப்பைகள், கோப்பைகள் மற்றும் மாட்டு சாணங்கள் அகற்றப்படாமல் உள்ளதால், இளைஞர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவிக்கப்பட்டும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டத்திலும் இதுதொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு பல மாதங்கள் கடந்தும், சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி துணை அலுவலர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல், 6-வது வார்டு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் வாரத்திற்கு ஒருமுறை கூட முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை என்றும், இதனால் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு அருகிலேயே இளைஞர் விளையாட்டு மைதானம் குப்பை மேடாக காட்சியளிக்கும் நிலையில், மற்ற பகுதிகளின் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதை அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சோமலாபுரம் 6-வது வார்டு புதுமனை பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, விளையாட்டு மைதானத்தில் குவிந்துள்ள குப்பைகள், கோப்பைகள் மற்றும் மாட்டு சாணங்களை உடனடியாக அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். மேலும், கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஊராட்சி செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலரும் ஊராட்சி மன்ற உறுப்பினருமான வி.டி. சுதாகர் மற்றும் வார்டு உறுப்பினர் எஸ்.மணி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.






கருத்துகள் இல்லை