ஸ்ரீ சங்கரா கல்லூரியில் மாவட்ட அளவிலானபோதைப்பொருள் விழிப்புணர்வு போட்டிகள்
காஞ்சிபுரம் ஏனாத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் MY Bharat அமைப்பும் ஸ்ரீ சங்கரா கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டமும் இணைந்து, "Drug Free Youth for Viksit Bharat" என்ற தேசிய இயக்கத்தின் ஒரு பகுதியாக மாவட்ட அளவிலான கலை மற்றும் இலக்கியப் போட்டிகளை கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடத்தின. இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு கல்லூரி மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் நாட்டுப்புற இசை, நாட்டுப்புற நடனம், மௌன நாடகம், ஓவியப் போட்டி, பேச்சுப்போட்டி, கவிதை, குறும்படம்/ரீல்ஸ் தயாரித்தல் மற்றும் முழக்க வாசகம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போதைப்பொருளின் தீமைகள், இளைஞர்களின் சமூகப் பொறுப்பு மற்றும் போதை இல்லா இந்தியா என்ற கருத்துகளை மையமாகக் கொண்டு மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில மற்றும் தேசிய அளவிலான அடுத்தகட்ட போட்டிகளில் பங்கேற்க பரிந்துரைக்கப்படுவார்கள் என்று காஞ்சிபுரம் MY Bharat அமைப்பின் துணை இயக்குநர் சரவணன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் கலை. இராம. வெங்கடேசன் தலைமையேற்று போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகையும் சான்றிதழும் வழங்கி வாழ்த்தினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் திரு ஆர். சுரேஷ்குமார், திரு மு. விவேகானந்தன், முனைவர் ப. ஏழுமலை, முனைவர் பா. பூர்ணிமா, MY Bharat அமைப்பின் திட்ட அலுவலர் காமேஷ்குமார் மற்றும் போதைப்பொருள் தடுப்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு ம. கணபதி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் ஆசிரியப்பெருமக்களும் 200 க்கும் மேற்பட்ட மாணவர்களும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : மு.விஜயேந்திர ராஜா






கருத்துகள் இல்லை